மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?
மதம் மாறினால் நடை, உடை, பாவனை, மொழி, தேசப்பற்று அனைத்தும் மாறிவிடுமென்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் பிரச்சாரம் செய்கிறது. அந்த அவதூறு பிரச்சாரத்தை வலுவான வாதங்களோடு வேரறுக்கும் கட்டுரை
கண்ணை மறைக்கும் காவிப் புழுதி
சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 1
இந்து மதம்தான் தேசபக்தியென்றும், மற்ற மதங்களெல்லாம் தேச விரோதமென்றும், சிறுபான்மை மத மக்களெல்லாம் வெளிநாடுகளின் பால் பற்று கொண்டவர்கள் என்றெல்லாம் ஆர்.எஸ்.எஸ் கும்பல் அப்பட்டமாக பிரச்சாரம் செய்கிறது. மக்களது வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் எளிய நிகழ்வுகளைக்கூட இவர்கள் தங்களது பாசிச பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். பொதுப்புத்தியில் இவர்கள் விதைக்கும் விஷம் ஆழமானது. அவற்றை வேரறுத்து புதிய கலாச்சரம் வெளியிட்டிருக்கும் இந்த நூல் தமிழகத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒன்று. அந்த கட்டுரைகளை இங்கே வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?
”மத மாற்றம் என்பது வெறும் கடவுளை மட்டும் மாற்றிக் கொள்ளும் விசயமல்ல.அது ஒரு தேசிய மாற்றம். இந்து மதத்திலிருக்கும் போது ‘வணக்கம்‘ சொன்னவர்,முசுலீமாக மாறும்போது ‘அஸ்ஸலாமு அலைக்கும்‘ என்கிறார்.கிறித்தவர் ‘தோத்திரம்‘ அல்லது ‘குட்மார்னிங்‘ என்கிறார். வேட்டி மாறிபேண்ட்டோ, லுங்கியோ நிரந்தர உடையாக மாறுகிறது. பெண்கள் பூச்செடி, பொட்டுவைத்து, கோலமிட்டு, குத்துவிளக்கு ஏற்றுவது நின்று போகிறது. தேங்காய்உடைத்து, குத்துவிளக்கு கற்பூரம் ஏற்றி பாரதப் பண்பாட்டின்படி ஆரம்பிக்கப்படும்காரியங்கள் ரிப்பன் வெட்டி ஆரம்பிக்கப்படுகிறது. பிறந்த நாட்களுக்குக்கோவிலுக்குப் போகும் பழக்கம் மாறி கேக் வெட்டும் பழக்கம் வருகிறது.‘ஒருவனுக்கு ஒருத்தி‘ என்ற பண்பாடு மாறி பலதாரமணம், விவாகரத்துசெய்வதுமான கலாச்சாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பாரதத்தில் உள்ள புனிதஸ்தலங்கள் மறந்து விதேசங்களிலுள்ள மெக்கா, மெதினா, வாடிகன்,கான்ஸ்டாண்டிநோபிள், ஜெருசலேம் – புனித நகரங்களாகக் கருதப்படுகின்றன.முன்னோர்கள், தாத்தா, பாட்டிகளை முட்டாள்கள், அறிவிலிகள் என்று கருதும்எண்ணம் வளர்கிறது. சித்திரை முதல் தேதியைப் புத்தாண்டாகக் கொண்டாடியதுபோய் ஜனவரி 1 கொண்டாடப்படுகிறது.மொத்தத்தில் ஆன்மீக நாட்டம் நொடிந்து லோகாயதவாதம் பெருகி கொலை,கொள்ளை, கற்பழிப்பு போன்ற எண்ணற்ற குற்றங்கள் பெருகி வளர்கின்றன.மதமாற்றத்தில் ஏற்படும் தேசிய மாற்றங்களுக்கு இவை ஒரு சிலஉதாரணங்களே.”- இந்து முன்னணி வெளியிட்டிருக்கும் ‘மதமாற்றத் தடைச் சட்டம் ஏன்?’ என்றவெளியீட்டில் இருந்து.____________________________________________________________________________
அ) நமஸ்காரம் போய் குட்மார்னிங், தோத்திரம்,அஸ்ஸலாமு அலைக்கும்.
வணக்கம் என்ற வார்த்தை பார்ப்பன இந்துப் பண்பாடல்ல என்பது முதல் விசயம். ‘நமஸ்காரத்தை’ ஒழித்து தமிழகத்தில் ‘வணக்கத்தை’க் கொண்டு வந்தது திராவிட இயக்கத்தின் முயற்சியாகும். அது மட்டுமல்ல, க்ஷேமம் நலமாகவும், அபேட்சகர் வேட்பாளராகவும், பொதுக்கழிப்பிட ஸ்திரீ – புருஷன், ஆண் – பெண்ணாகவும், இன்னும் ஏராளமான சொற்கள் மாற்றப்பட்டு மக்களுக்கு உதவி புரிந்தன. ஆனால், இன்றும் ஆர்.எஸ்.எஸ்.- இல் இருக்கும் இளித்தவாய்த் தமிழர்கள் கூட ‘நமஸ்தே ஜீ’ எனக் கூற வேண்டும் என்பதுதான் அவர்கள் மரபு.
அடுத்து, ‘குட் மார்னிங்’ சொல்பவர்களெல்லாம் கிறித்தவரா? வெள்ளையர்கள் கொண்டு வந்த மரியாதை குறித்த சொற்களும் பழக்கங்களும்தான் இந்தியாவில் பரப்பப்பட்டன; அநேக நாடுகளிலும் வழக்கத்திலிருக்கிறது. அரசு அதிகார வர்க்கத்தில் தொடங்கிய இந்த ஆங்கில மரியாதையை அனைவருக்கும் பரப்பி விட்டதே ‘அவாள்’தான். இன்று ‘குட்மார்னிங்’ பழைய சம்பிரதாயமாகி, ”ஹாய், ஹல்லோ” தான் நகரங்களில் கொடிகட்டிப் பறக்கின்றது. இதைப் பரப்பிவிட்டவர்கள் பாதிரியார்களா என்ன?
தோத்திரம் என்ற சொல் ஸ்தோத்திரம் என்ற சமஸ்கிருதச் சொல்தான். பார்ப்பனர்கள் கிறித்துவ மதத்திற்கு மாறியோது சடங்குகளையும் சமஸ்கிருதத்தையும் கொண்டு சென்றதன் விளைவே இது. அதிலும் ‘ஸ்’-ஐ உருவிவிட்டு வெறும் தோத்திரமாக்கியது தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்களே.
கிறித்தவர்களின் கை குலுக்கவும், இசுலாமியர்களின் ஆரத் தழுவும் முறையும், பார்ப்பனியத்தைவிட நாகரீகமான பழக்கங்களாகும். நமஸ்காரம் என்பது கை கூப்பி, தலை தாழ்த்தி முழு உடலையும் கிடத்தி வணங்கும் முறையாகும். அதுவும் கடவுள், பார்ப்பனர்கள், மன்னர்கள், மடாதிபதிகள், மேல்சாதியினர், தற்போது தலைவர்கள் – அதிகாரவர்க்கம் – மந்திரிகள் போன்றோருக்குச் செலுத்தப்படும் அடிமைத்தனமாகும்.
மக்களுக்குள் மனிதர்களுக்குள் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தி விசாரித்தல் என்பது இந்து மரபிலேயே இல்லை. பார்ப்பனியத்தின் கறைபட்ட தமிழின் ‘வணக்கமும்’ இதற்கு விதி விலக்கல்ல. முக்கியமாக நமஸ்காரம் யாரையும் தொட வேண்டிய அவசியமில்லாமல், தீண்டாமையை க்ஷேமமாகப் பாதுகாக்கிறது.
ஆக கிறித்தவ, இசுலாமிய மேலை நாட்டுப் பண்பாட்டின்படி சகமனிதனைக் கைகுலுக்கி, ஆரத்தழுவும் முறையையே நாம் மேற்கொள்ள வேண்டும். இதற்கேற்ற புதிய தமிழ்ச் சொல்லும் கண்டுபிடிக்க வேண்டும். இம்முறையில் தீண்டாமை ஒழிப்பும் உள்ளது. எனவே அவமரியாதையின் பிறப்பிடமான பார்ப்பனப் பண்பாட்டின் சொந்தக்காரர்களுக்கு மரியாதை குறித்துப் பேசும் அருகதையில்லை.
ஆ) வேட்டி போய் பேண்ட், லுங்கி
இந்துப் பண்பாட்டின்படி வெளி ஆடைகள் மட்டுமல்ல, உள் ஆடைகளும் மாறியிருக்கிறதா என்று ஏன் ஆராயவில்லை? கோவணம், லங்கோடு அணியாதவர்கள் எப்படி ‘இந்து’க்களாக இருக்க முடியும்? ஏதோ குர்ஆனிலும், பைபிளிலிலும் சொல்லப்பட்டிருப்பதுபோல லுங்கி இசுலாத்திற்கும், பேண்ட் கிறித்தவத்திற்கும் சொந்தமானது என்பது முழு முட்டாள்தனமாகும். அரேபியாவில் எந்த முசுலீம் லுங்கி உடுத்துகின்றான்? உடைகள் என்பது வர்க்கம், தொழில், தட்பவெப்ப நிலை சம்பந்தப்பட்டதுதான். பேண்ட் உலகத்திற்கும், லுங்கி ஆசியாவுக்கும் பொதுவான உடைகள்தான்.
உழைக்கும் மக்களுக்கு லுங்கி உடுத்தினால் வேலை செய்ய வசதியாக இருக்கிறது. லுங்கி உடுத்துபவர்கள் எல்லாம் முசுலீம்கள் என்றால் இந்துக்கள் எண்ணிக்கை சிறுபான்மையாகிவிடும். சேலையைவிட முகலாயர்கள் அறிமுகப்படுத்திய சுரிதார், சல்வார் கமீஸ் வசதியாக இருக்கிறது என்பதால்தான் பெண்கள் விரும்பி அணிகிறார்கள். வேண்டுமானால் அதை ஆர்.எஸ்.எஸ் தடுக்கட்டுமே? அவ்வளவு ஏன்? ஷாகாவில் பயிற்சி பெரும் ஸ்வயம் சேவக குண்டர்கள் அணியும் அரைக்கால் சட்டை, பெல்ட் ஷூ எல்லாம் இந்துப் பண்பாடா? இன்னும் இராணுவம், போலீசு, கமாண்டோ எல்லாருக்கும் வேட்டி, மரச்செருப்பை மட்டும் போட வைத்து பாரதப் பண்பாட்டைக் காப்பாற்றுங்கள். டெண்டுல்கருக்கு பஞ்சக்கச்சம் உடுத்துங்கள். பி.டி.உஷாவிற்கு மடிசார் கட்டி ஓடச் சொல்லுங்கள்.
இவற்றைவிட சட்டை, பேண்ட் துணி தயாரிக்கும் விமல், அர்விந்த், ஜே.சி.டி, குவாலியர், ரேமண்ட்ஸ், மதுரா கோட்ஸ், லட்சுமி மில் போன்ற இந்து பனியா முதலாளிகளிடம் அதை நிறுத்திவிட்டு, வேட்டி, கோவணம் லங்கோடு மட்டும் தயாரிக்க ஆணையிடுங்களேன்.
இ) பெண்கள் பூச்சூடி, பொட்டு வைத்து கோலமிட்டு,குத்து விளக்கு ஏற்றுவது நின்று போகிறது
வீடு வாசல் தெளித்து கோலமிட வேண்டுமென்றால் முதலில் வீடும் வாசலும் வேண்டும். அப்படியே இருந்தாலும் ‘அழகு படுத்துவது’ என்பது வர்க்கம், வசதிக்கேற்பவே மாறுகிறது. மீனவப் பெண் வீட்டின் முன் கருவாடும், விவசாயப் பெண்ணின் வீட்டில் தானியமும், குயவர் பெண் வீட்டில் களிமண் சேறும், கால்நடை வளர்க்கும் பெண்வீட்டில் புழுக்கைகளும் நிறைந்திருக்கும்.
ஆனால், பார்ப்பன – மேல்சாதி – மேல்தட்டுப் பிரிவினரின் வீடுகள் முன் பெரிய வாசல், துளசி மாடம், சிறு கோவில், தோட்டம் எல்லாம் இருக்கும். ஏதோ உலகிலேயே இந்து வீடுதான் சுத்தமாக இருப்பது போலவும் ஏனைய வீடுகள் பன்றித் தொழுவமாக இருப்பதாகவும் இவர்கள் கூறுவது பிதற்றல். குத்து விளக்கு வகையறாவெல்லாம் என்றைக்குமே ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் பயன்படுத்தியது கிடையாது; முடியாது. முதலில் அகல் விளக்கு, காடா விளக்கு, சிம்னி, அரிக்கன் என்றுதான் மாறியது. தற்போதுதான் குத்துவிளக்கு அறிமுகமாகியது என்றாலும் அது இல்லாத வீடு இந்து வீடில்லை என்றால் இந்துக்கள் சிறுபான்மையினராகி விடுவார்கள்.
அதேபோல பட்டுச் சேலை உடுத்தி, தலை நிறைய பூச்சூடி, உடல் முழுவதும் ஆபரணங்கள் அணிவது மேல்சாதி மேட்டுக்குடியினர் மட்டும்தான். உழைக்கும் பெண்களைப் பொறுத்தவரை இப்பேர்ப்பட்ட அலங்காரங்களெல்லாம் வெகு அரிது. மேலும் இந்த அழகுக் கலைகளெல்லாம் பெண்களைப் போகப் பொருளாக்கி நுகர்வதற்காக ஆணாதிக்கமும், மதமும், முதலாளித்துவமும் உருவாக்கிய அடிமைத்தனம்தான். எனவே அனைத்து மதங்களும் பெண்ணைப் போக பொருளாக வைப்பதற்கு விதித்திருக்கும் பூ, பொட்டு, பர்தா போன்றவைகளை ஒழிக்க வேண்டும் என்கிறோம். தற்போது சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய் தொடங்கி ஏகப்பட்ட இந்து அப்சரஸ்கள் உலக அழகி பட்டங்களை வென்று பாரத மாதாவின் புகழை எட்டுத் திக்கும் பரப்பி வந்தாலும், அவர்கள் அழகை வளர்த்த விதமே ‘கிறித்தவ’ப் பாணியிலான மேற்கத்திய அலங்கார முறைகளில்தான்.
இது குறித்துக் கவலைப்படும் இந்து மதவெறியர்கள், இந்துப் பண்பாட்டின்படி அழகிகளை உருவாக்கி உலகை வீழ்த்துவதற்கு, காமசூத்திரம், சௌந்தர்யலகரி, கனகதாரா ஸ்தோத்திரம், ஜெயதேவரின் அஷ்டபதி போன்ற பக்தி ரசம் சொட்டும் இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்து, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை வைத்துக் கல்லூரிப் பெண்களிடம் விநியோகிக்கலாம்.
அவ்வாறு செய்தால், பெண்களே இவர்களை செருப்பாலடித்து ‘ஈவ் டீசிங்’ கேஸில் பிடித்துக் கொடுப்பார்கள்.
ஈ) பாரதப் பண்பாட்டின்படி ஆரம்பிக்கப்படும்காரியங்கள் மறைந்து போதல்
விமானத் தாங்கிக் கப்பல்களோ, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளோ, அணுகுண்டு வெடிப்போ அனைத்தையும் நாள் நட்சத்திரம் பார்த்து, யாகம் வளர்த்து, கற்பூரம் – குத்து விளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்துத்தான் இன்றும் இயக்கி வைக்கின்றார்கள். அன்னியச் செலாவணித் தட்டுப்பாடோ, பணவீக்கமோ என்றால் ரிசர்வ் வங்கியில் உடனே ஒரு பூசை செய்கிறார்கள். குடமுழுக்கிற்கு மட்டுமல்ல, தேர்தல் நாளையே சங்கராச்சாரிதான் குறிக்கிறார். பெரும் நிறுவனங்கள் வருடந்தோறும் தமது அலுவலகங்களை வாஸ்து சாஸ்திரப்படி கன்னாபின்னாவென்று இடித்து மாற்றுகின்றன. இந்தியா என்பது ‘பாம்பாட்டிகளின் தேசம், பண்டாரங்களின் நாடு’ என்று பெயர் வருவதற்குக் காரணமே இந்தப் பார்ப்பன முட்டாள்தனங்கள்தான்.
அறிவியல், பகுத்தறிவு, மதச்சார்பற்ற நோக்கில் முன்னேறிவரும் வாழ்க்கைக்கு மதச் சடங்குகள் தேவையில்லை. ஏனென்றால் இம்மூன்றும் வளருவதற்குத் தடைவிதித்ததே மதங்கள்தான். எனவே, இலட்சக்கணக்கான ரூபாய்கள் வீணடிக்கப்பட்டு ‘பாரத பண்பாட்டின்படி’ ஆரம்பிக்கப்படும் காரியங்கள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும். இவைகளுக்கு ரிப்பன் வெட்டுவது எவ்வளவோ மேல். அதிருக்கட்டும். துவக்க விழாக்களில் ‘இந்து’ குத்துவிளக்கை ‘கிறித்துவ’ மெழுதுவர்த்தியால்தான் கொளுத்துகிறார் அத்வானி. பாரதப் பண்பாட்டின்படி அவர் கையில் தீவிட்டியைக் கொடுத்து விடலாமே! பொருத்தமாகவும் இருக்கும்.
உ) ‘ஒருவனுக்கு ஒருத்தி‘ என்ற பண்பாடுபலதாரமணம், விவாகரத்து போன்ற சீரழிவுகளுக்குமாறுகிறது.
‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது இந்துப் பண்பாடல்ல. ‘ஒருத்திக்கு ஒருவன்தான்’ இந்துப் பண்பாடாகும். அதாவது ஆணுக்கு எத்தனை மனைவிகள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், பெண்ணுக்கு ஒருவன் மட்டுமே கணவனாக முடியும். மேலும் இந்தப் பண்பாடு உலகெங்கிலும் இருக்கும் ஆணாதிக்கப் பண்பாடுதான்.
பலதாரமணத்தை ஒழித்து ‘ஒருவனுக்கு ஒருத்திதான்’ என்பதை 1950-இல் அம்பேத்கார்தான் சட்டமாகக் கொண்டு வந்தார். அதை மட்டுமல்ல, குழந்தை மணத்தடை, விதவை மறுமணம், விவாகரத்து அனைத்தையும் இந்துமத வெறியர்கள்தான் எதிர்த்தார்கள்; முசுலீம்கள் அல்ல. எனவே சமீபகாலம் வரை ஒருவன் பல பெண்களை வைத்திருப்பதுதான் இந்துப் பண்பாக இருந்தது. 7-ஆம் நூற்றாண்டிலாவது நபி நாயகம் 4 மனைவிக்கு மேல் மணக்கக்கூடாது எனக் கட்டுப்பாடு விதித்தார். ஆனால், இந்து மதத்தில் 20-ம் நூற்றாண்டு வரை அந்தக் கட்டுப்பாடு கூட இல்லை என்பதே முக்கியம்.
விவாகரத்து என்பது மேற்கிலிருந்து வந்த சாபக்கேடு என்கிறார்கள். இல்லை, அது ஒரு ஜனநாயக உரிமையாகும். இந்து தர்மப்படி புல்லாகப் பொறுக்கியாக இருந்தாலும் கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழும் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, விவாகரத்து ஒரு பெண்ணுக்குரிய உரிமைகளைக் கொடுக்கின்றது. எனவே, மேற்கோ, கிழக்கோ சரியான பண்பாடு எங்கிருந்து வந்தாலும் முதலில் மரியாதை செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்து மத இலக்கியங்களில் தெய்வங்களும் பார்ப்பனர்களும் மாறுவேடம் பூண்டு கள்ள உளவு கொள்வது, கற்பழிப்பது என்பது சாதாரண விசயம். இத்தகைய ‘உரிமைகள்’ இன்று பறிபோன நிலையில்தான் இந்து மத வெறியர்கள், குய்யோ முறையோ என்று கத்துகிறார்கள். இந்தக் கொடுமைகள் பெருமளவு இல்லாமல், விவாகரத்து, மறுமணம் போன்றவை நம்நாட்டு உழைக்கும் மக்களிடம் இயல்பாக இருந்தது. இதை எண்ணித்தான் நாம் பெருமைப்பட வேண்டும்.
ஊ) பாரத புனித ஸ்தலங்களை மறந்து விதேச புனிதநகரங்களை நினைப்பது
இதன்படிப் பார்த்தால் இந்துக்களின் புனித இடங்களான பசுபதிநாத் நேபாளத்திலும், கைலாயமும் மானசரோவரும் சீனாவிலும் இருக்கின்றது. இவ்விடங்களுக்குச் செல்லும் இந்துக்கள் இந்தியாவின் தேசவிரோதிகள் என்றே கருத வேண்டும். உலகெங்கும் வாழ்ந்து வரும் புத்த மதத்தினர் தென் கிழக்காசிய நாடுகளில் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இவர்களுக்கு இந்தியாவின் புத்த கயா புனிதமான இடமென்பதால், அவர்கள் அந்தந்த நாடுகளின் தேச விரோதிகளா?
அதேபோல் இந்தியாவில் இருந்து பல தலைமுறைகளுக்கு முன்பே, இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, பிஜித் தீவுகள், மொரீஷியஸ், மாலத்தீவு, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இந்தியர்கள் குடியேறி வாழ்கிறார்கள். இன்று அந்நாடுகளின் குடிமக்களாக, ஏன் அமைச்சர்களாகக் கூட இருக்கிறார்கள். இந்தியா மறந்து போனாலும் மதம் என்ற அடிப்படையில் இங்குள்ள புனித இடங்கள்தான் அவர்களுக்கும் புனிதம். இதனால் இவர்களைத் தேசத்துரோகி என்று அந்நாடுகள் அடித்துத் துரத்தலாமா?
வாடிகனும், பெத்லஹேமும், மெக்கா, மெதினாவும் உலக கிறித்தவ, முசுலீம் மக்கள் அனைவருக்கும் புனிதமான இடங்களாகும். ஆர்.எஸ்.எஸ். கணக்குப்படி உலகிலுள்ள மற்ற கிறித்தவ, முசுலீம் நாட்டு மக்களுக்கு தேசபக்தி இல்லை என்றாகிறது. அல்லது உலகில் ஒரு கிறித்தவ நாடும், ஒரு முசுலீம் நாடும் மட்டும்தான் இருக்க வேண்டும். ஏன் அப்படி இல்லை? அப்படி இருக்க முடியாது என்பதைத்தான், ஒரு தேசத்தையோ, தேசபக்தியையோ ஒரு மதத்தால் உருவாக்க முடியாது என்ற உண்மை நமக்கு உணர்த்துகிறது. தேசம் உருவாக அரசியல், சமூகம், பொருளாதாரம், மொழி, பண்பாடு – போன்றவைதான் காரணமாக முடியும். மத நம்பிக்கையும், புனித நகரங்களும் யாருக்கும் தேசபக்தியை உருவாக்க வக்கற்றவையே!
பார்ப்பன, மேல் சாதியினரைத் தவிர்த்து பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பண்பாட்டில் தீர்த்த யாத்திரைகளெல்லாம் கிடையாது. நாட்டுப்பற்று என்றால் என்ன? ஸ்வயம் சேவகர்கள் பாரத மாதா போட்டோவுக்குப் பூசை செய்வது அல்ல. நாட்டு மக்களைச் சுரண்டல், ஒடுக்கு முறை, பிற்போக்கு அனைத்திலும் இருந்து விடுவிக்க தளராமல் போராடுவதுதான் நாட்டுப்பற்றைக் குறிக்கும். இது காசிக்கோ, மெக்காவுக்கோ யாத்திரை செல்வதால் வருவதல்ல.
எ) முன்னோர்கள், தாத்தா, பாட்டிகளை – முட்டாள்கள்,அறிவிலிகள் என்று கருதும் எண்ணம் வளருகிறது
”கங்கைக் கரையிலும், காவிரிக் கரையிலும் அரிசியை உணவாக உட்கொண்டு வாழும் சில ஜந்துக்கள், வேதத்திலேயே எல்லாம் கண்டுபிடிச்சாச்சாக்கும் என்று மமதையுடன் பிதற்றுவதை” புதுமைப்பித்தன் குறிப்பிடுகிறார். வேதம் மட்டுமல்ல அனைத்துப் பிற்போக்குத் தன்மைகளையும் முதியோருக்குக் கட்டுப்படல் என்ற இன்னொரு பிற்போக்கின் மூலம்தான் பார்ப்பனியம் வாழையடி வாழையாகத் தொடருகின்றது. அதனால்தான் எல்லாப் பிரிவினரிடமும் உள்ள புதுமையும், துடிப்பும் கொண்ட இளைய பிரிவினர்கூட இத்தகைய முட்டாள் முதியவர்களால் விரைவில் முதியவராக்கப்படுகின்றனர்.
எனவே முதுமை, இயலாமை, ஓய்வு என்ற அளவிலே மட்டும்தான் முதியவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு ஒரு சமூகத்துக்கு இருக்கவேண்டும். அதேநேரத்தில் அவர்களது முட்டாள் தனங்கள் பிற்போக்குக் குணங்கள் ஆகியவற்றை ஒழிப்பதற்குப் போராடுவதையும் அதே சமூகம் செய்ய வேண்டும் என்கிறோம்.
ஏ) சித்திரைபோய் ஜனவரி கொண்டாடுதல், ஆன்மீகம்அருகில் லோகாயதம் சீர்கேடுகள் பெருகுதல்
இந்துப் பஞ்சாங்கத்தின்படியே எல்லா இந்துக்களுக்கும் ஒரே வருடப்பிறப்பு என்பது கிடையாது. தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, வடகிழக்கு போன்று பல வருடப் பிறப்புக்கள் கொண்டாடப்படுகின்றன. வழக்கம்போல இவையும் பார்ப்பன மேல்சாதி – மேல் தட்டினர் கொண்டாடுபவைதான். வாழ்நாள் முழுதும் ஏழ்மையில் உழலும் அடித்தட்டு மக்களுக்கு பழைய – புதிய என்ற வருடப் பிரிவினைக்கு முக்கியத்துவம் ஏதுமில்லை.
ஜனவரி ஆரம்பத்தை – கிறித்தவ மதத்தினர் மட்டுமல்ல, உலகமே கொண்டாடி வருகின்றது. கோவிலில் போய் அர்ச்சனை செய்து புத்தாண்டு கொண்டாடுவது நடுத்தர வர்க்க மக்களின் பழக்கமாக ஏற்பட்டு விட்டது. பல இசுலாமிய நாடுகளிலும் இத்தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. பிறந்த நாளுக்குக் கோவிலுக்குப் போவதோ, கேக் வெட்டுவதோ முக்கியமல்ல. அப்படி ஒரு நாள் இருப்பதே தெரியாமல்தான் சாதாரண மக்கள் வாழுகின்றனர். மேலும் ‘ஜன்ம நட்சத்திரம்’ என்ற கடவுளர்கள், மன்னர்கள், பார்ப்பனர்கள் ஆகியோரது தினங்கள்தான் இந்துக்களுக்கு முக்கியமாகும்.
மற்றபடி பொதுமக்கள் தங்கள் பிறந்தநாள், திருமண நாள் கொண்டாடுவது ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய பண்பாடு. இதையும் காசு உள்ள நடுத்தர வர்க்கம்தான் கொண்டாடுகிறது. கேக்கோ, பாயசமோ எல்லாம் நுகர்வுக் கலாசாரத்தின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்குத்தான் லாபம் தருமே ஒழிய, மக்களுக்கல்ல. சர்வதேச மூலதனச் சுரண்டலுக்கு மத லேபிளெல்லாம் கிடையாது. ‘லோகாயதம் பெருகி அராஜகங்கள் வளருவது’ என்று, சாரத்தில் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டங்களைத்தான் குறிப்பிடுகிறார்கள். அதாவது சாதி, தீண்டாமை எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு, இட ஒதுக்கீடு ஆதரவு, தேசிய இன ஒடுக்குமுறை எதிர்ப்பு ஆகிய போராட்டங்கள்தான் அவர்களுக்குக் கலிகாலத்தை உணர்த்துகின்றது.
மற்றபடி கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகள் மதமாற்றத்தினால் நடக்கிறது என்றால் எதைச் சொல்லி அழ? பிரேமானந்தா, சந்திராசுவாமி, சாயிபாபா, ஜெயா – சசி கும்பல், அர்ஷத்மேத்தா, ஜெயின் சகோதரர்கள், சம்பல் கொள்ளையர்கள், இன்டர்நெட் விபச்சாரி பிரகாஷ் போன்றோர்களெல்லாம் ரகசியமாக மதம் மாறியவர்களா? இதற்கு இராம.கோபாலனைப் போட்டு ஒரு விசாரணைக் கமிஷன் நியமித்து, வெள்ளை அறிக்கை வெளியிடுங்களேன்!
பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா?
மனச்சாட்சி சுதந்திரத்தின் அடிப்படையில்தான் ஒருவன் மதம் மாறுகிறான். அவன் பால்பவுடரைக் காட்டி மாற்றப்பட்டானா, பரம பிதாவைக் காட்டி மாற்றப்பட்டானா என்பதை ஆராய நீதிமன்றத்திற்கு ஏது உரிமை?
கண்ணை மறைக்கும் காவிப் புழுதி
சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 2
”சமயங்களுக்கு இடையே உள்ள தராதரங்களை எவ்வாறு ஒரு பசுவால் உணர்ந்துகொள்ள முடியாதோ அவ்வாறே அவர்களாலும் (ஹரிஜனங்களாலும்) உணர்ந்துகொள்ள முடியாது… கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்பதைப்பாகுபடுத்திப் புரிந்து கொள்ளும் மனமோ, புத்திக் கூர்மையோ, திறமையோஹரிஜனங்களுக்குக் கிடையாது.””நீங்கள் வைத்ய உதவி அளிக்கும்போது அதற்கு வெகுமதியாக உங்களின்நோயாளிகள் கிறித்தவ மதத்தில் சேர வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்…””பொதுவாகக் கூற வேண்டுமெனில் எங்கெல்லாம் கிறித்தவ மதத்திற்குமதமாற்றம் செய்யப்பட்டுள்ளதோ, அது ஒரு ஆன்மீகச் செயலாக எந்தவிதத்திலும் இருந்ததில்லை. இவையெல்லாம் சௌகரியத்திற்காகச் செய்யப்பட்டமதமாற்றமே”…”கிறித்தவ மத போதனைக் குழுக்கள் தங்கள் பணியை அக்கறையுடன் ஆற்றவேண்டுமானால், ஹரிஜனங்களை மதமாற்றம் செய்யும் அநாகரிகமானபோட்டியிலிருந்து அவர்கள் அவசியம் விலகிக் கொள்ள வேண்டும்”…- இவை கிறித்தவ மதமாற்றம் பற்றிய சங்கராச்சாரியின் அருள் வாக்கல்ல;அல்லது விசுவ இந்து பரிசத்தின் திமிர் பிடித்த கிழட்டுச் சாமியார்கள் யாரும்கூறியதல்ல. இவை மதமாற்றம் குறித்த ‘மகாத்மாவின்‘ கருத்துக்கள். 1936, 37-ஆம்ஆண்டுகளில் தனது ‘ஹரிஜன்‘ பத்திரிகையில் அவர் எழுதியவை. (அம்பேத்கர் நூல்தொகுப்பு, தொகுதி -10).
மதமாற்றம் குறித்து ஒரு தேசிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வாஜ்பாயி கூறியவுடனே, ”இதுபற்றி அரசியல் சட்டமும் நீதி மன்றமும் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கின்றன. புதிதாக விவாதம் எதுவும் தேவையில்லை” என்று காங்கிரசு உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் பத்திரிகைகளும் மடையடைத்ததற்கான காரணம் நேர்மையானதல்ல. குஜராத்தில் தேவாலயங்கள் கொளுத்தப்பட்டதைக் கண்டித்து ‘இந்து’ ஆங்கில நாளிதழ் (14.1.99) எழுதிய தலையங்கத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டது:
”குஜராத் மாநிலத்தின் இந்து செயல்வீரர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்று வைத்துக் கொண்டாலும் – அதாவது குஜராத் டாங்ஸ் மாவட்டத்தில் கட்டாயமாகவும், பணத்தாசை காட்டியும் மக்கள் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு – அவற்றைக் கையாள்வதற்கு இப்போது இருக்கின்ற சட்டங்களே போதுமானவை.”
இப்போது இருக்கின்ற சட்டங்கள் என்ன சொல்கின்றன?
”ஏமாற்றியோ, ஆசை காட்டியோ, கட்டாயப்படுத்தியோ மத மாற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம்” என்று ஒரிஸ்ஸா, ம.பி. ஆகிய இரு மாநில காங்கிரசு அரசுகள் 70களில் ஒரு சட்டமியற்றின. இந்தச் சட்டத்திற்கு எதிராக ஸ்தனிஸ்லாஸ் என்ற பாதிரியார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இச்சட்டம் அரசியல் சட்டத்தின் 25வது பிரிவு வழங்கும் ‘மத உரிமை’ எனும் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும் என்று வாதாடினார். ”மதப் பிரச்சாரம் செய்யும் உரிமை என்பது மதமாற்றம் செய்யும் உரிமை அல்ல” என்று கூறிய உச்சநீதி மன்றம் 1977-இல் அவரது வாழ்க்கைத் தள்ளுபடி செய்தது.
”சட்டப்பிரிவு 25(1) வழங்குகின்ற ‘மனச்சாட்சிச் சுதந்திரம்’ என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ளதேயன்றி ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் வழங்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தனது மதத்தின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வது என்பதைக் கடந்து, அடுத்தவரை தன் மதத்திற்கு மாற்றுவது என்ற முயற்சியில் ஒருவர் ஈடுபடுவாரேயானால், அத்தகைய நடவடிக்கையானது மற்ற குடிமக்களின் மனச்சாட்சிச் சுதந்திரத்தில் தலையிடுவது ஆகும்.”
எனவே, ”ஏமாற்றியோ ஆசை காட்டியோ கட்டாயப்படுத்தியோ மதமாற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம்” என்று ஒரிசா, ம.பி. மாநில அரசுகள் இயற்றிய சட்டம் செல்லத்தக்கதே என 1977-லேயே உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து விட்டது. இதுதான் மதமாற்ற உரிமை பற்றிக் கடைசியாக வந்துள்ள உச்சநீதி மன்றத் தீர்ப்பு. இனி, இந்தப் பிரச்சினை குறித்து ஆர்.எஸ்.எஸின் பொதுச் செயலாளர் எச்.வி.சேஷாத்ரி, 5.2.99 அன்று ‘இந்து’ பத்திரிகைக்கு எழுதியுள்ள கடிதத்தின் சில பகுதிகளைப் பார்ப்போம்.
”ஏமாற்றியோ, கட்டாயப்படுத்தியோ, ஆசைகாட்டியோ மத மாற்றம் செய்வது சட்டவிரோதமானது. ஆனால், மேற்கூறிய வார்த்தைகளின் பொருள் என்ன?” ”எடுத்துக்காட்டாக, பிரச்சாரம் செய்து மக்களைக் கூட்டுவது, இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் எனக்கு வியாதிகள் குணமானது என்று பொய்சாட்சி சொல்லும் நபர்களைக் காட்டுவது, காடுகளில் பழங்குடி மக்களைத் திரட்டி நள்ளிரவு முகாம்கள், விருந்துகள் நடத்தி வீடியோ திரைப்படங்கள் மூலம் மதப்பிரச்சாரம் செய்வது… – மதமாற்றம் செய்யப் பயன்படுத்தப்படும் இந்த வழிமுறைகள் எல்லாம் ‘ஏமாற்று’ இல்லையா?””மதம் மாற்றும் நோக்கத்துடன் பணம் கொடுத்தாலும், சோறு போட்டாலும், மருந்துகள் கொடுத்தாலும், ஏன் கல்வியே அளித்தாலும் இவையெல்லாம் ”இவ்வுலக ஆசை”யைத் தூண்டுபவைதானே! இவற்றுக்கும் ஆன்மீக விடுதலைக்கும் என்ன சம்பந்தம்?” ”மகாத்மா காந்தியும், அன்றைய ம.பி.காங்கிரசு அரசு நியமித்த நியோகி கமிசனும் தெளிவாகக் கூறியதுபோல, கிறித்தவ மதத்திற்கு மாறுபவர்கள் தங்களது புராதனமான சமுதாய, கலாச்சார வாழ்வின் இழைகளையெல்லாம் துண்டித்துக் கொள்கிறார்கள்; அழித்துக் கொள்கிறார்கள். மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு இரையாகி விடுகிறார்கள்.”
இதுதான் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலர் சேஷாத்திரியின் குற்றச்சாட்டு.
இதுவரை படித்ததை நிதானமாக ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள்! ஒரிஸ்ஸா பாதிரியார் கொலைக்குப் பிறகு பாரதீய ஜனதா ஒருபுறமும், அதன் கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட பிற கட்சிகள், பத்திரிகைகள், நீதிமன்றம் ஆகிய அனைத்தும் எதிர்ப்புறமும் நின்று மோதிக் கொண்டிருந்தது போலத் தெரிந்த மாயை கலைந்து விடும். மத மாற்றம் குறித்து அரசியல் சட்டமும், அகிம்சா மூர்த்தியும், ஆர்.எஸ்.எஸ். காரர்களும் கூறுவது ஒன்றேதான் என்பது தெளிவாகும்.
மதமாற்றத்தில் ஈடுபடும் பாதிரியார்களை உயிருடன் கொளுத்துவதா, சட்டப்படி தண்டிப்பதா என்பதுதான் இவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு!
பால் பவுடர் – லவுகீகம், காமதேனு – ஆன்மீகம்!
ஜெபக் கூட்டம் நடத்தி மதம் மாற்றுவது ஏமாற்று! சோறு போட்டும், மருந்து கொடுத்தும் மதம் மாற்றுவது ‘இவ்வுலக ஆசையைத் தூண்டுவது’; காந்தியின் வார்த்தைகளில் சொன்னால் இந்த மதமாற்றங்கள் எல்லாம் ‘ஆன்மீகச் செயல்கள்’ அல்ல – சவுகரியத்திற்காகச் செய்யப்பட்ட லவுகீக (இவ்வுலகம் சார்ந்த) நடவடிக்கைகள்! இகலோக சவுகரியங்களுக்காக மதம் மாறுவது இழிவு, அவ்வாறு மதம் மாறுவதும், மாற்றுவதும் எப்படி என்று வாசகர்கள் தெளிவடைய வேண்டும்.
பைபிளையோ, குர்ஆனையோ வேத புராணங்களையோ ஆதாரமாகக் கொண்டு ”எங்களது சொர்க்கத்தில் ஒயின், ஆட்டிறைச்சி, அப்சரஸ் ஸ்திரீகள் போன்ற இன்னின்ன வசதிகள் உண்டு” என்று ஆசை காட்டலாம். அந்த ஆசையில் மயங்கி இவ்வுலக சிற்றின்பங்களை மறந்து மேற்படி ‘பேரின்பத்தில்’ நாட்டம் கொள்பவர்களை மதம் மாற்றலாம; அதை உச்சநீதி மன்றம் அனுமதிக்கிறது.
புரியும்படி சொல்வதானால் காமதேனு என்று ஆசை காட்டலாம், ஆனால், பால்பவுடர் விநியோகிக்கக்கூடாது; கற்பக விருட்சம் என்று ஆசை காட்டலாம். ஆனால், கல்வி அளிக்கக்கூடாது; கைலாய பதவி உண்டு என்று உத்திரவாதம் தரலாம. ஆனால், சாகக் கிடக்கிறவனுக்கு வைத்தியம் செய்யக்கூடாது. இதுதான் சட்டத்திற்கான விளக்கம். கல்விக்கு சரஸ்வதி, காசுக்கு லட்சுமி, மூளைக் கோளாறுக்கு குணசீலம், அம்மைக்கு மாரியம்மா, இன்னும் வயிற்றுவலி, வாய்க்கோளாறுக்குத் தனித்தனி கடவுள்கள் என்று இவ்வுலக இன்ப – துன்பங்களை இலாகா வாரியாகப் பிரித்துத் தனித்தனிக் கடவுள்கள் வைத்திருக்கும்போது இகலோக ஆசையைத் தூண்டுவதில் என்ன குற்றம்?
கடவுள் வரை போவதற்குக் காலதாமதம் ஆகும் என்பதால், ”உடனடி நிவாரணம் – நீடித்த இன்பம்” என்று பிரச்சாரம் செய்யும் சாய்பாபா, சிவசங்கர் பாபா போன்ற ஆக்ஷன் – 500, வயாக்ரா மாத்திரைகள் எல்லாம் வழங்குவது என்ன பேரின்பமா? ஜெபக் கூட்டங்கள் ஏமாற்று என்றால், மழை வருவதற்கும், வெயில் அடிப்பதற்கும் காஞ்சி ‘முனிவர்’ நடத்தும் வேள்விகள் எல்லாம் பத்தரைமாற்றா? ஆனானப்பட்ட அப்பர் பெருமானே அல்சருக்காக மதம் மாறியவர்தானே, நான் கான்சருக்காக மாறினால் என்ன என்று கூடக் கேட்கலாம். ஆனால், இதற்கெல்லாம் பதில் கிடையாது. அப்பருக்கு வந்தது ‘ஆன்மீக அல்சர்’ என்று விளக்கம் சொல்லி விடுவார்கள்.
திருச்சபைக்குத் தெரியாதா இவர்களின் தில்லுமுல்லு? அதனால்தானே ”ஆத்தும சரீர சுகமளிக்கும் கூட்டம்” என்று சிற்றின்பத்துடன் பேரின்பத்தையும் ஒட்டவைத்து சட்டத்திற்கு டிமிக்கி கொடுத்து விட்டார்கள்.
மனச்சாட்சியை ஆராயும் நீதிபதிகள்!
சரி. இகலோக ஆசை காட்டி மதம் மாற்றுவது குற்றம். அப்படி மாற்றியவர்களைச் சிறையில் தள்ளலாம். மாறியவர்களை எங்கே தள்ளுவது?
பால் பவுடர், பணம் காசு கிடக்கட்டும்; மீனாட்சிபுரத்தில் இசுலாமுக்கு மாறிய தாழ்த்தப்பட்ட மக்கள் பகிரங்கமாகச் சொல்கிறார்கள், ”சமமாக டீ குடிக்க வேண்டும், செருப்பணிந்து நடக்க வேண்டும், தோளிலே துண்டு போட வேண்டும், ஒரே கோயிலில் சாமி கும்பிட வேண்டும், சாதி வேறுபாடு இல்லாமல் எல்லோரும் எல்லோர் வீட்டிலும் அமர்ந்து சாப்பிட வேண்டும் – போன்ற இகலோக ஆசைகளுக்காகத்தான் இசுலாமுக்கு மாறினோம்” என்று தெளிவாகச் சொல்கிறார்கள். மதம் மாறுவதற்கு முன் ‘டேய்’ என்று கூப்பிட்டவன் இப்போது ‘பாய்’ என்று கூப்பிடுகிறானென்று மகிழ்ச்சி அடைகிறார்கள்.
கோயிலை மசூதியாக மாற்றினான் என்று கூறி, மசூதியை இடித்து அதனை ‘சர்ச்சைக்குரிய இடம்’ என்று பெயரிட்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு விட்டவர்கள் மீனாட்சிபுரத்தில் மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்களை என்ன செய்வார்கள்? சட்டவிரோதமாக – கேவலம் செருப்பு அணிந்து நடப்பது போன்ற அற்பமான இகலோக சவுகரியங்களுக்காக – மதம் மாற்றப்பட்ட மக்களை சர்ச்சைக்குரிய மனிதர்களாக்குவார்களா? அவர்கள் இந்துவா முசுலீமா என்பதை உச்சநீதி மன்றம் தீர்மானிக்குமா?
இது குதர்க்கமல்ல; எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கோ, பின்பற்றாமல் இருப்பதற்கோ வழங்கப்பட்டுள்ள ‘மனச்சாட்சி சுதந்திரம்’ என்னும் சுதந்திரத்தின் அடிப்படையில்தான் ஒருவன் மதம் மாறுகிறான். அவன் பால்பவுடரைக் காட்டி மாற்றப்பட்டானா, பரம பிதாவைக் காட்டி மாற்றப்பட்டானா என்பதை ஆராய நீதிமன்றத்திற்கு ஏது உரிமை? மதம் மாறியவர்களின் மனச்சாட்சியை ஆராய்வது இருக்கட்டும்; கட்சி மாறிகளின் மனச்சாட்சியை நீதிமன்றம் ஆராயப்புகுந்ததுண்டா?
பிறப்பால் மதத்தைத் தீர்மானிப்பது இறையியலா,உயிரியலா?
இந்த நாட்டில் ஒவ்வொரு இந்துவும், முசுலீமும், கிறித்தவனும் சுயமாகச் சிந்தித்து ”இந்த வழிதான் எனது ஆன்மவிடுதலைக்கு உகந்தது” என்று தெளிந்து, தனக்குரிய பரலோகத்தால் கவரப்பட்டு அந்தந்த மதத்தில் இருக்கிறானா, அல்லது ‘நாய்க்குப் பிறந்தது நாய்க்குட்டி’ என்பது போல இந்துவுக்குப் பிறந்ததால் இந்து, கிறித்தவனுக்குப் பிறந்ததால் கிறித்தவன் என்ற கணக்கிலா? நடைமுறையில் குடிமக்கள் பலரின் மதத்தைத் தீர்மானித்துக் கொண்டிருப்பது இறையியலா, அன்றி உயிரியலா?
பால் பவுடர் கொடுத்து மதம் மாற்றுபவன் குற்றவாளி என்றால், பாலூட்டி, சோறூட்டி வளர்த்த ஒரே காரணத்தினால் மதமில்லாமல் பிறந்த மனிதக் குழந்தையை இந்துவாகவும், முசுலீமாகவும் மத மாற்றம் செய்யும் பெற்றோர்கள் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் என்று கொள்ளலாமே? அல்லது வயது வந்தோர் வாக்குரிமை போல, வயது வந்த ஒவ்வொரு குடிமகனும் எல்லா மக நூல்களையும் கற்று, தன் மனச்சாட்சிப்படி ஒரு மதத்தைத் தெரிவு செய்து தழுவவோ, எதையும் தழுவாமல் இருக்கவோ முடியும் என்ற நடைமுறை அமலில் உள்ளதா? ஆள்பவனைத் தெரிவு செய்யவே 18 வயதாக வேண்டும் எனும்போது ஆண்டவனைத் தெரிவு செய்ய அதற்கும் மேல் வயதும் அனுபவமும் வேண்டாமா?
இது வேடிக்கையல்ல, குடும்பத்திற்கும் மதத்திற்கும் உள்ள ‘இயற்கையான’ உறவை மீனாட்சிபுரத்தில் துண்டித்து விட்டார்கள். அப்பா மதம் மாறி அப்துல்லாவானார்; மகன் ரங்கசாமியாகவே இருந்து கொண்டான். மதம் மாறிய ஒரு பெண் இசுலாத்தில் பெண்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பிடிக்காததால் பழைய படி ‘இந்து’வாகி விட்டாள். அவளைத் தாய் மதத்திற்கு வரவழைக்க எந்த விசுவ இந்து பரிசத்தும் போய் சடங்கு நடத்தவில்லை. இவர்களையெல்லாம் நீதிமன்றம் என்ன செய்யும்?
இத்தனை கேலிக்கூத்தான தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகள் அவ்வளவு அடிமுட்டாள்களா என்று வாசகர்கள் வியப்படையலாம். இந்துமதச் சார்பை மனதில் வைத்துக்கொண்டு மதச் சார்பின்மை வேடம் அணிந்து கொள்ளும்போது அதன் விளைவு சட்டரீதியான கோமாளித்தனமாகி விடுகிறது. அவ்வளவுதான்!
படிப்பது கிறித்தவப் பள்ளி இடிப்பது மாதாகோயில்!
கோமாளித்தனம் கிடக்கட்டும். பார்ப்பன இந்து மத வெறியர்களின் அயோக்கியத்தனத்தைக் கொஞ்சம் ஆராய்வோம். ”மதம் மாற்றும் நோக்கத்துடன் பணம் கொடுத்தாலும், சோறு போட்டாலும், மருந்து கொடுத்தாலும், ஏன் கல்வியே அளித்தாலும் அவையெல்லாம இவ்வுலக ஆசையைத் தூண்டுபவைதானே” என்கிறார் ஆர்.எஸ்.எஸ். செயலர் சேஷாத்ரி.
அப்படியே வைத்துக் கொள்வோம். கிறித்தவராக மதம் மாறியவர்கள் யாரும் மாதாக்கோயில் மணியோசையால் கவர்ந்திழுக்கப்படவில்லை எனும்போது தேவாலயங்களுக்கு நெருப்பு வைப்பானேன்? இவ்வுலக ஆசையைத் தூண்டி இந்துக்களை மதமாற்றம் செய்கின்ற பொறிகளான கிறித்தவப் பள்ளி கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் அல்லவா ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அடித்து நொறுக்கவேண்டும்!
ஆனால், அதைச் செய்ய முடியாது. காரணம் மனிதாபிமானமல்ல; அவை தேவைப்படுகின்றன. தோன்போஸ்கோவும், லயோலாவும், செயிண்ட் ஸ்டீபனும் இன்ன பிற பள்ளிகளும் கல்லூரிகளும் பார்ப்பன உயர் சாதி இந்துக்களுக்குத் தேவை. சர்ச் பார்க் கான்வென்டு, தோடர்கள் – இருளர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிப்பதற்காகவா, கட்டப்பட்டிருக்கிறது? மதமாற்றச் சதியின் கூடாரங்களாக சேஷாத்ரி குறிப்பிடும் கிறித்தவக் கல்லூரிகளில் படித்தவர்கள்தான் பாரதீய ஜனதாவின் பல தலைவர்கள் என்று ஒரு பட்டியலே வெளியிட்டிருக்கிறது ‘அவுட்லுக்’ வார ஏடு!
படிப்பது கிறித்தவப் பள்ளி, இடிப்பது மாதாகோயில்! ஆர்.எஸ்.எஸ்.கும்பலின் இந்த ‘ஆன்மீக வலிமை’ தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடி மக்களுக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் இல்லாமற் போனதற்காக அவர்கள் பெருமைப்பட வேண்டுமா அல்லது வருத்தப்பட வேண்டுமா?
மதம் மாறுபவன் தேசத் துரோகி! தேசம் மாறினால்தேசபக்தன்!
”கிறித்தவ மதத்திற்கு மாறுபவர்கள் தங்களது புராதனமான சமுதாய கலாச்சார வாழ்வின் இழைகளையெல்லாம் துண்டித்துக் கொள்கிறார்கள். மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு இரையாகி விடுகிறார்கள்” என்று வருத்தப்படுகிறார் சேஷாத்திரி. விசுவ இந்து பரிசத்தின் தலைவரோ ”கிறித்தவர்கள் மேலை நாடுகளுக்கும் முசுலீம்கள் பாகிஸ்தானுக்கும்தான் விசுவாசம் காட்டுகிறார்கள்” என்று குற்றம் சாட்டுகிறார். ”மதமாற்றம் என்பது தேசிய மாற்றம்தான்” என்கிறது ஆர்.எஸ்.எஸ்.
குஜராத்திலும், ஒரிசாவிலும் மதம் மாறிய பழங்குடிகள் அதே காட்டில் தான் சுள்ளி ஒடித்துக் கொண்டிருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறித்தவராக மதம் மாறிய மீனவர்களை விசைப்படகிலேறி அப்படியே அமெரிக்காவிற்கு ஓடவிடவில்லை. ஆர்.எஸ்.எஸ்.ஸிடம் வெட்டுப்படுவதற்காக மண்டைக்காட்டுக்குத்தான் திரும்பி வருகிறார்கள். இவர்களெல்லாம் மதம் மாறியும் தேசத்தை மாற்றிக் கொள்ளாத ‘தேசத் துரோகிகள்’.
மதம் மாறாமலேயே தேசத்தை மாற்றிக்கொள்ளும் ‘தேச பக்தர்களை’ப் பார்க்க வேண்டுமா? அதிகாலை 5 மணிக்கே சென்னை அண்ணா மேம்பாலத்தின் மேல் நின்றபடி அவர்களைப் பார்க்கலாம். அமெரிக்க கான்சல் அலுவலகத்தின் வாயிலில், அந்தக் காம்பவுண்டு சுவரை அண்ணாந்து பார்த்தபடி நின்றிருப்பார்கள்.
பாரதமாமாவின் மடியிலிருந்து தப்பி ஓடும் அந்த ”வெளிநாட்டில் குடியேறவிருக்கும் இந்தியர்”களில் இந்துக்கள் எத்தனை பேர், கிறித்தவர்கள் எத்தனை பேர் என்று ஆர்.எஸ்.எஸ் கணக்கெடுக்குமா? இராமனும், கிருஷ்ணனும், ரிஷிகளும், முனிவர்களும் அவதரித்த இந்தப் புண்ணிய பூமியை விட்டு ஓடுகிறார்களே, அவர்களை ஆசை காட்டி இழுப்பது யார்? அமெரிக்கப் பாதிரியார்களா? அவர்கள் பால்பவுடருக்கு மதம் மாறும் புளியந்தோப்பு, வியாசர்பாடி இந்துக்களல்ல; டாலருக்காக தேசம் மாறும் மயிலாப்பூர், மாம்பலம் இந்துக்கள். கட்டாய மதமாற்றம் போல இவர்கள் கட்டாயமாக தேசிய மாற்றத்துக்கு ஆளாகிறார்களோ? இல்லை. அன்றும் இல்லை, இன்றும் இல்லை.
பிஜியின் கரும்புத் தோட்டத்தையும் இலங்கையின் தேயிலைத் தோட்டத்தையும், மலேசியாவின் ரப்பர் தோட்டத்தையும் உருவாக்கக் கட்டாயமாகக் கப்பல் ஏற்றப்பட்ட உழைக்கும் சாதியினர் அகதிகளாகத் திரும்பி வந்தார்கள். கேம்பிரிட்ஜிற்கும், ஆக்ஸ்போர்டிற்கும் கப்பலேறிய அவாள், ஐ.சி.எஸ். அதிகாரிகளாகவும், ஐகோர்ட்டு வக்கீல்களாகவும் திரும்பி வந்தார்கள். இன்று வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்களாகத் திரும்பி வருகிறார்கள். பார்ப்பான் கப்பலேறினால் சாதி – மதத்தை விட்டு நீக்க வேண்டும் என்று பேசியவர்கள், இன்று பகவானையே கப்பலேற்றி அனுப்புகிறார்கள்.
மதமாற்றத்திற்குத் தடை விதிக்கக் கோரும் பாரதீய ஜனதா, இந்தத் தேச மாற்றத்துக்குத் தூபம் போட்டு வளர்க்கிறது. ஏனென்றால் அவர்கள் அமெரிக்காவில் ஆலயம் அமைக்கிறார்கள். தியாகய்யர் உற்சவம் நடத்துகிறார்கள், அனைத்துக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ்.ஸூக்கும் அள்ளித் தருகிறார்கள்.
சட்டத்தினால் ஒரு கொட்டடி!
அவர்கள் வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்கள். கிறித்தவர்களும் முசுலீம்களும் இந்நாட்டில் குடியேறிய அந்நியர்கள்! தேசத்தையே மாற்றிக் கொண்டாலும் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமையும், இந்தியக் குடிமக்களைவிட மேலதிக உரிமைகளையும் பாரதீய ஜனதா வழங்கும். ஆனால், சாதிக்கொடுமையிலிருந்து தப்பிக்க கிறித்தவத்திற்கோ, இசுவாமிற்கோ மதம் மாறினால் தாழ்த்தப்பட்டவர்களின் இடஒதுக்கீடு உரிமையை ரத்து செய்யக்கோரும்.
இதுதான் கட்டாயம். இதுதான் மிரட்டல். ஏனென்றால் ஆசை காட்டிக் கவர்ந்திழுப்பதற்கு இந்து மதத்தில் எதுவும் இல்லை. கிறித்தவத்திற்கும் இசுலாத்திற்கும் மாறிய சூத்திர பஞ்ச சாதியினருக்குச் சேவை செய்து அவர்களை மீண்டும் இந்து மதத்திற்குக் கவர்ந்திழுக்க முடியாது. ஏனென்றால் இவாளுக்குச் சேவை செய்வதற்காகவே அவர்களை நியமித்திருக்கிறது இந்துமதம். மதமாற்றம், ‘சகோதரன் பிரிந்து விட்டானே’ என்ற துயரத்தை இந்து மத வெறியர்களுக்குத் தோற்றுவிக்க வில்லை. ‘வேலைக்காரன் ஓடி விட்டானே’ என்ற ஆத்திரத்தைத் தான் உண்டாக்குகிறது.
அதனால்தான் அடிமைத்தனத்திலிருந்து தப்பியோட முயன்ற கறுப்பின மக்களை அமெரிக்க வெள்ளை நிறவெறியர்கள் கொட்டடியில் அடைத்ததுபோல, கிறித்துவத்துக்கும் இசுலாமுக்கும் தப்பியோடி விடாமல் தடுக்க, சட்டத்தால் ஒரு கொட்டடி கட்ட முயல்கிறார்கள் இந்து மதவெறியர்கள். ‘ஆசை காட்டுவதற்கு’ப் பாதிரியாரும், அரபுப் பணமும் இல்லாமல் போனாலும் அறுத்துக்கொண்டு ஓடுவதற்கு அநேகம் பேர் தயாராக இருப்பதால்தான் கொட்டடியைப் பூட்டிவிட முயல்கிறார்கள். ஆசை காட்டுபவனைத் தண்டிக்கத் தானே சட்டம் இருக்கிறது. ”அறுத்துக் கொண்டு போகவே முடியாது” என்று சட்டம் போட்டுவிட்டால் சநாதன தருமத்தை நிரந்தரமாக்கி விடலாமே என்று திட்டம் போடுகிறார்கள்.
பார்ப்பன மதத்திற்கு மாற முயன்றதற்காக அன்று நந்தன் எரிக்கப்பட்டான். பார்ப்பன மதத்தைவிட்டு மாற முயற்சிப்பதற்காக இன்று நந்தனின் வாரிசுகள் எரிக்கப்படுகிறார்கள்.
அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?
தாழ்த்தப்பட்ட மக்கள் அநாகரீகமானவர்கள், போக்கிரிகள் இதற்காகத்தான் அம்மக்களோடு அம்பேத்கர் மதம் மாறினார் என்பது வெறுப்பும், திமிரும், பார்ப்பன ‘மேல்’ சாதிக் கொழுப்பும், நரித்தனமும் கலந்த பொய்
கண்ணை மறைக்கும் காவிப் புழுதி
சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 3
”அம்பேத்கர் ஏன் புத்த மதத்திற்கு மாறினார்?அம்பேத்கர் ‘மஹர்‘ எனப்படும், சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு பிரிவில் பிறந்தார். ‘மஹர்‘ பிரிவு மக்களுக்குச் சிறந்தபோர்க்குணங்கள் உண்டு. ஆனால், கல்வியறிவு கிடையாது. அதன் காரணமாகவேஅவர்களால் சமுதாயத்தில் சிறந்த அந்தஸ்து பெற முடியாமல் இருந்தது.ஒரு தனிமனிதனின் குணங்கள் அவன் வளர்க்கப்படும் சூழ்நிலையிலும், அவனதுஉணவையும் பொறுத்தே இருக்கிறது என்பதையும் அம்பேத்கர் அறிவார். புலால்உணவை மறுப்பது ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று அவர்ஆராய்ந்தார். ‘பஞ்சமா பாதகங்களைச் செய்யாதே‘ என்று உபதேசித்தால், மக்கள்கேட்டுவிடப் போகிறார்களா என்ன? மாறாக அதைச் சொல்லாமல் அந்த நிலைக்குஅவர்களை இயற்கையாகவே இட்டுச் செல்ல வேண்டும். பஞ்சமா பாதகங்களைப்பற்றிக் கவலைப்படாதவை கிறிஸ்தவம், இசுலாம். அப்படியானால் அவர்களைநல்ல நிலைக்கு இட்டுச் செல்ல புத்தமதத்தால்தான் இயலும்.புத்த மதத்தில் சேர்ந்த பின்பு அதன் கொள்கைகளை நெறிப்படிக் கடைப்பிடிக்கவைப்பதன் மூலம் அவர்களை நல்ல நிலைக்கு முன்னேற்றி, சிந்தித்துச்செயல்படும் திறன் உள்ளவர்களாக மாற்றி, சமுதாயத்தில் சம அந்தஸ்துஉடையவர்களாக அவர்களை ஆக்கிவிட முடியும் என்று அவர் நம்பியதாலேஇலட்சக்கணக்கான தொண்டர்களுடன் அவர் புத்த மதத்திற்கு மாறினார்.அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் அம்பேத்கருக்கு சட்டஅமைப்பு 25-ன் விதிப்படி புத்தமதம் ஹிந்து மதத்துடனே ஒன்றாகவேகருதப்படுகிறது என்பது எப்படி நினைவற்றுப் போகும்? சட்டத்தைத் தொகுத்ததுஅவரல்லவா? எனவே அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறியதற்கு அதுவே காரணம்.”- ‘மதமாற்றத் தடைச் சட்டம் ஏன்‘இந்து முன்னணி வெளியீடு, பக்கம் 32.
”தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியறிவற்ற மூடர்களாக, அசுத்தமான வாழ்க்கையை வாழ்ந்தனர்; இறைச்சி உண்ணும் பழக்கங்கொண்ட அவர்கள் பொய், திருட்டு, பெண்டாளுதல் போன்ற பஞ்சமா பாதகங்கள் செய்யும் போக்கிரிகளாகவும் இருந்தனர்; இவற்றிலிருந்து அவர்களைத் திருத்த நினைத்த அம்பேத்கர் இசுலாம், கிறித்தவம் போன்ற அநாகரீக மதங்களைத் தவிர்த்துவிட்டு இந்து மதத்தின் உட்பிரிவான புத்த மதத்திற்குத் தனது ஆதரவாளர்களோடு மதம் மாறினார்” என்பதே இதன் பொருள்.
தாழ்த்தப்பட்ட மக்கள் அநாகரீகமானவர்கள், போக்கிரிகள் என்பது பார்ப்பன ‘மேல்’ சாதியினர் இன்று வரையிலும் கொண்டுள்ள வெறுப்புக் கலந்த திமிரான கருத்தாகும். இதற்காகத்தான் அம்மக்களோடு அம்பேத்கர் மதம் மாறினார் என்பது வெறும் பொய்யல்ல; பார்ப்பனக் கொழுப்பும் நரித்தனமும் கலந்த பொய். காரணம், அவர்கள் பார்ப்பன இந்து மதத்தால் தண்டிக்கப்பட்ட வரலாற்று அடிமைகள். அவர்கள் அடிமைகள் என்று உணர்வதைக் கூட அனுமதிக்காத பார்ப்பன இந்துமதம்தான் அநாகரீகமானது என்றார் அம்பேத்கர்.
ஒரு மதம் என்பது பொதுவாக மானுடத்தின் அறவியல், மகிழ்ச்சி, விடுதலையைப் பேசுகின்ற கொள்கைகளைக் கொண்டிருக்கும். ஆனால், இந்து மதம் என்பது கொள்கைகளின் தொகுப்பா அல்லது தண்டனைகளைப் பட்டியலிடும் குற்றவியல் சட்ட விதிகளின் தொகுப்பா? சாதிப்படி நிலையில் சூத்திர – பஞ்சம மக்கள் எப்படி அடங்கி ஒடுங்கி வாழவேண்டும் என்பதையே விதிகளாய் வைத்திருக்கும் பார்ப்பனியத்தை ஒரு மதம் என்று அழைக்கமாட்டேன் என்றார் அம்பேத்கர். சமூக நீதிகளைப் பொறுத்தவரை மனு தர்மத்தின் சட்டங்களை விடக் கேவலமான சட்டங்கள் எதுவுமில்லை என்று இந்து மதத்தின் மனித விரோதத் தன்மையைக் கிழித்துக் காட்டினார்.
‘இந்து’ என்ற பெயரே முகமதியர்கள் இட்ட பெயர்தான். அவர்கள் அப்படிப் பெயரிடவில்லை என்றாலும் பிரச்சினை ஏதும் வரப்போவதில்லை. காரணம் நாமெல்லாம் ஒரு நாட்டு மக்கள் என்ற சகோதர சமூக சிந்தனை பார்ப்பனியத்தின் சாதிய சமூகத்தில் இல்லாதபோது ஒரு பொதுவான பெயர் பற்றிய கேள்வியே எழுவதில்லை. இந்து – முசுலீம் சண்டையை தவிர்த்துப் பார்த்தால் இங்கே தனித்தனிச் சாதியாக வாழ்வதே முதலும் முடிவுமான குறிக்கோளாக இருக்கிறது. மக்கள் தங்களுக்குள் கலந்து உறவாடுவதாலேயே சமூகமாக வாழ்கின்றனர். ஆனால், இங்கே பிரிந்து வாழ்வதையே சட்டமாக வைத்திருக்கும் ஒரு நாட்டில் சமூகம் எங்கே இருக்கிறது என்று சீறியவர் அம்பேத்கர்.
சாதிய அமைப்பு என்பது தொழில்களை மட்டுமல்ல, தொழிலாளர்களையும் ஏற்றத்தாழ்வாக செயற்கையான தனித்தனித் தீவுகளாய்ப் பிரித்து விடுகிறது. பரம்பரை பரம்பரையாய் குலத்தொழில் செய்து வரும் ஒருவன் தன் தொழிலின் நலிவால் வாழ இயலாத போதும் பட்டினி கிடந்து சாவானே ஒழிய வேறு தொழில் செய்ய மாட்டான். அப்படிச் செய்வதை நினைத்தும் பார்க்க முடியாத வாழ்வைத்தான் பார்ப்பன இந்து மதம் விதித்திருக்கிறது என்று வழக்காடினார் அம்பேத்கர்.
இப்படி வாழ்வையும் சிந்தனையையும் மட்டுமல்ல உடற்கூற்றையும் பார்ப்பன இந்துமதத்தின் சாதியம் தனது மீற முடியாத அகமண முறையால் எப்படி நலிவடைய வைத்திருக்கிறது என்றால், இந்திய மக்களில் 100-க்கு 90 பேர் ராணுவத்துக்கு (உடல், எடை, உயரம்) இலாயக்கில்லாதவர்களாக உருவாக்கியிருக்கிறது என்று கேலி செய்தார் அம்பேத்கர். அது மட்டுமா, ஒவ்வொரு சாதிக்கும் விதிக்கப்பட்ட தனித்தனி உடை, உணவுப் பழக்கங்கள் காரணமாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வேடிக்கைப் பொருளாக, அருங்காட்சியகமாக இந்தியா இருப்பதை சினத்துடன் எடுத்துக் காட்டினர் அம்பேத்கர்.
கழுத்தில் கலயத்தையும், இடுப்பில் துடைப்பத்தையும் கட்டி தாழ்த்தப்பட்ட மக்களை வீட்டு நாயைவிடக் கேவலமாக நடத்திய இந்துக்கள் தங்களைப் பற்றியும், அதேபோல தம் அருகே வாழும 130 லட்சம பழங்குடியினர் (அம்பேத்கர் காலத்தில்) எந்த நாகரீக வளர்ச்சியுமின்றி ‘குற்றப் பரம்பரையாக’ நீடிப்பது பற்றியும் வெட்கமோ, வேதனையோ அடைவதில்லை என்று காறி உமிழ்ந்தார் அம்பேத்கர். இம்மக்களுக்கு கிறித்தவ மிஷனரிகள் செய்யும் சேவையைப் போல் இந்துக்கள் ஒருக்காலும் செய்ய முடியாது என்றும், அத்தகைய சகோதரத்துவ எண்ணமே பார்ப்பனியத்தின் ஆன்மாவில் கிடையாது என்பதையும் விளக்கினார்.
ஆரிய சமாஜத்தின் ‘தாய் மதம்’ திருப்பும் மதமாற்றச் சடங்கை ஒரு மோசடி என நிரூபித்தவர் அம்பேத்கர். ஏனைய மக்கள் ‘தம் கொள்கையால் மட்டுமே விடுதலை பெற முடியும்’ என்று தம் எண்ணிக்கையைப் பெருக்குவதற்கான அடிப்படையைக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்து மதமோ அத்தகைய வாக்குறுதியைக் கொடுக்க முடியாததோடு, அப்படி ஒரு முயற்சியையும் செய்ய முடியாது. காரணம் இந்து மதத்தில் சேர்க்கப்படும் ஒரு புதியவரை எந்தச் சாதியில் வைப்பது என்ற பிரச்சினை உள்ளது. சாதித் தூய்மையில் இரத்தக் கலப்பை விரும்பாத இந்துச் சமூகம் நெடுங்காலமாய் மதப் பிரச்சாரம் மற்றும் மதமாற்றம் செய்யாததற்கும் இதுவே காரணம் என்றார் அம்பேத்கர்.
”நாங்கள் சாதியை ஏற்கவில்லை, அவை இந்து மதத்தில் நுழைந்த இடைச் செருகல்கள், தொழில்முறை வேலைப் பிரிவினைக்காக ஏற்பட்ட வருண அமைப்பே இந்து மதத்தில் ஏற்படுத்தப்பட்டது” என வருண அமைப்புக்கு ஆதரவாக ஆரிய சமாஜத்தினர் வழக்காடினார்கள். அப்படி என்றால் ஒவ்வொரு தொழிலுக்கும் பிராமணன், சத்ரியன், வைசியன் என்று முத்திரை குத்துவது ஏன், பிறப்பின் அடிப்படையில் மட்டும் தொழில் தீர்மானிக்கப்படுவது ஏன், தொழில் மாறும் உரிமை கொடுக்க மறுப்பது ஏன், அப்படி மாறினால் கடும் தண்டனை வழங்கும் காப்பாளராக இந்து மதம் இருப்பது ஏன் என்று கேட்ட அம்பேத்கர், நான்கு வருணங்கள் - நான்காயிரம் சாதிகள் எனப் பிரிந்திக்கிறதே ஒழிய தன்மையில் ஒன்றுதான் என்று அம்பலப்படுத்தினார்.
மேலை நாடுகளைப் போல இந்தியாவில் ஒரு சமூகப் புரட்சி ஏன் நடக்கவில்லை? ஐரோப்பாவில் உள்ள ஒரு தொழிலாளி இராணுவத்தில் சேரும் உரிமையிலிருந்து தனது பௌதீக ஆயுதத்தையும், போராடும் உரிமையிலிருந்து தனது அரசியல் ஆயுதத்தையும் கல்வி கற்கும் உரிமையிலிருந்து தனது தார்மீக ஆயுதத்தையும் பெற்றிருந்தான். அதனால் அங்கே புரட்சிகள் நடந்தன. இங்கே பெரும்பான்மை மக்களுக்குக் கல்வி கற்கும் உரிமையும், போராடும் உரிமையும், ஆயுதம் ஏந்தும் உரிமை கிடையாது. தனது கலப்பையோடு பிறந்து மாடு போல உழைத்துச் சாவதற்கு மட்டுமே உரிமை கொண்ட ஒரு சூத்திர – பஞ்சமன் தனது கலப்பைக் கொழுவை ஒருவாளாக மாற்ற அனுமதியில்லை. அதனால்தான் பல்வேறு கொடுமைகளைச் சகித்துக் கொண்டு வாழ்ந்த உழைக்கும் மக்களிடமிருந்து எந்தப் புரட்சியும் தோன்றவில்லை. தோன்றவும் முடியாது என்றார் அம்பேத்கர்.
இத்தகைய சாதிய அமைப்பை ஒழிக்காமல் ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது, வெள்ளையர்களை விரட்டினாலும் தமது அடிமைத்தனத்திலிருந்து மக்கள் விடுதலை அடைய முடியாது என்றார் அம்பேத்கர். ”தீண்டாமைப் பிரச்சினையையும் – மத மாற்றத்தையும் – இந்து மதத்திற்குள்ளேயே பேசித் தீர்த்து விடலாம் – அதை அரசியல் அரங்கிற்குக் கொண்டு வராதீர்கள்” என காந்தி ஒவ்வொரு முறையும் நயவஞ்சமாக நாடகமாடினார். பேசுவதற்கு முன்னால் உங்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெள்ளைக் குல்லாய் போட வேண்டும், கதராடை உடுத்த வேண்டும், என்று வைத்திருப்பதுபோல சாதி, தீண்டாமை பாராட்டுபவன் உறுப்பினராக முடியாது என்று விதி கொண்டு வர முடியுமா என காந்தியின் கழுத்தைப் பிடித்துக் கேட்டார் அம்பேத்கர்.
ஆங்கிலேயரின் கைக்கூலி, தேசத் துரோகி என்று காங்கிரசு கும்பலும், பத்திரிகைகளும் வசை பாடிய போதும் தனது போராட்டத்தை விட மறுத்தார் அம்பேத்கர்.
1927-ஆம் ஆண்டு மராட்டியத்தில் சவுதாகர் களப் போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தீண்டாமைக் கொடுமைக்கெதிரான நீரெடுக்கும் போராட்டத்தினைத் துவக்கினார் அம்பேத்கர். அடுத்த நாளே ‘இந்துக்கள்’ 108 பானைகளில் சாணம், பசு மூத்திரம், பால், தயிர் கொட்டி பார்ப்பனர்களின் யாகத்தோடு குளத்திற்குத் தீட்டு கழித்தார்கள். 1930-ஆம் ஆண்டு அம்பேத்கரும் தாழ்த்தப்பட்ட மக்களும் துவக்கிய நாசிக் கோவில் நுழைவுப் போராட்டம் 1935-ஆம் ஆண்டில்தான் வெற்றியடைந்தது.
அம்பேத்கரின் இத்தகைய போராட்டங்கள் வன்முறையற்ற அமைதியான போராட்டங்கள்தான் என்றாலும் இந்துக்கள் பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்தார்கள், தாக்கவும் செய்தார்கள். இதனால் இந்த நாட்டில் சாதி – தீண்டாமையை ஒழித்து ஒரு சமூக எழுச்சியைக் கொண்டு வரும் தனது முயற்சியில் இந்துக்களைத் திருத்த முடியவில்லையே என்று வேதனைப்பட்ட அம்பேத்கர் 1935 யேவா மாநாட்டில் ”நான் பிறப்பால் இந்துவாகப் பிறந்து விட்டேன். ஆனால், நிச்சயம் இந்துவாகச் சாகமாட்டேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன்” என்று முடிவெடுத்தார்.
இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன் 1956-ஆம் ஆண்டு 2 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களோடு புத்த மதம் மாறினார்.
அத்பேத்கர் புத்த மதம் மாறியதன் காரணம் என்ன?
பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராகவும், விகாரமான சடங்குகளுக்கு எதிராகவும், 25 நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றியது புத்த மதம். இந்து மதவெறியர்கள் கூறுவதுபோல பௌத்தம் இந்து மதத்தின் உட்பிரிவு அல்ல. ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கோல்வால்கரே, புத்த மதம் செல்வாக்குடன் இருந்த வடமேற்கு – வடகிழக்குப் பகுதிகளில் வருண – சாதிய அமைப்பு சீர் குலைந்ததாகவும், அதனாலேயே முசுலீம், கிறித்தவ மதமாற்றமும் படையெடுப்பும் நடந்ததாகக் கூறி பௌத்தத்தை அருவெறுப்புடன் பார்க்கிறார். கணிசமான காலம் பார்ப்பனியத்திற்கு மாற்றாக விளங்கிய புத்தமதம் செல்வாக்குடன் திகழ்ந்ததற்கு அசோகர் உள்ளிட்ட மௌரிய மன்னர்கள் அளித்த ஆதரவும் முக்கியக் காரணமாகும்.
கடவுள், சடங்கு, நிரந்தர உலகக் கொள்கையை நிராகரித்த புத்தர், அனுபவ ஆய்வையும் – அறிவையும் மட்டுமே நம்ப வேண்டுமென்றார். மேலும் அகத்தூய்மை, போதுமென்ற மனம், ஆசையை விட்டொழித்தல், பற்றுக்களை உதறுதல் ஆகியவற்றின் மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றார். அவர் அமைத்த பிக்குகள், பிக்குணிகள் அடங்கிய சங்கம் எளிமைக்கும், சகோதரத்துவத்திற்கும், சமூக அக்கறைக்கும் சான்றாக விளங்கியது. இப்படி பார்ப்பனியத்திற்கு எதிராகக் கிளம்பிய பௌத்தம் பல்வேறு வரலாற்றுக் காரணங்களால் தோல்வியைத் தழுவி, இந்தியாவிலிருந்தே விரட்டப்பட்டது.
புத்தரின் பார்ப்பனிய எதிர்ப்பும், சமூக நோக்கமும் அம்பேத்கருக்கு மிகவும் பிடித்திருந்தன. மேலும் மனிதனின் அறவியல் விழுமியங்கள் தோன்றி நீடிப்பதற்கு மதம் அவசியம் என்பதும் அவரது கருத்தாக இருந்தது. அவரைப் பொறுத்தவரை ஒரு நல்ல சமூகம் நிலவ வேண்டுமானால் சமூக நீதிகளைக் கொண்ட சட்டத்தை வைத்து மக்களை ஆளும் ஒரு நல்ல அரசு புறநிலையாகவும், மனிதனின் ஆன்மீக மேன்மையை வளர்க்கும் ஒரு மதம் அகநிலையாகவும் தேவை எனக் கருதினார்.
அதேசமயம் 25 நூற்றாண்டுகளுக்கு முந்தைய புத்த மதம் அந்தக் காலத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயன்ற ஒரு மதமே தவிர இன்றைய பிரச்சினைகளுக்கு அது தீர்வாகாது. அதாவது புத்தரின் ‘நிர்வாணநிலை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் போராடும் தேவையை மறுத்து, போதுமென்ற மனநிலையை அளிக்கிறது. இவையெல்லாம் அம்பேத்கருக்குத் தெரியாதா, என்ற கேள்விக்கு அவரது கடைசிக் காலத் தோல்விகளும், மதம் பற்றிய அவரது கருத்தும், சாதி ஒழிப்பிற்கான வழி முறை பற்றிய அவரது சித்தாந்தமும் பதிலாகின்றன.
அடுத்து முசுலீம் – கிறித்தவ மதங்களுக்க அவர் ஏன் மதம் மாறவில்லை? இந்து மதவெறியர் கூறுவது போல அவை ‘அநாகரீகமான மதங்கள்’ என்பதால் அல்ல. முதலில் அவை பார்ப்பனியத்தை எதிர்த்துப் பிறந்த மதங்கள் அல்ல; இரண்டாவது, இந்த மதங்களும் பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பை ஓரளவிற்கு ஏற்றபிறகே இந்தியாவில் நிலைபெற ஆரம்பித்தன.
மேலும் இசுலாமும், கிறித்தவமும் தமது மதக் கொள்கைகளைவிட வலுவான நிறுவன ரீதியான வலைப்பின்னலாலும், அரசு போன்ற கண்காணிப்பு செய்யும் சமூக நெறிப்படுத்தலாலும்தான் நீடிக்கிறது என்பது அவருக்குப் பிடிக்கவில்லை. பௌத்தம் மட்டுமே தனிமனிதனிடம் அறவியல் நல்லொழுக்கங்களை சுதந்திரமான முறையில் வளர்த்தெடுக்கின்றது என்பது அவர் கருத்து. ஆனால், இன்றும் புத்த சமயம் செல்வாக்குடன் வாழும் நாடுகளில் கூட அது நிறுவன ரீதியான மதமாகத்தான் இருக்கின்றது. மேலும் அம்பேத்கரின் புத்தமத மாற்றம் என்பது பார்ப்பன இந்து மதத்தை அசைத்துப் பார்க்கும் அளவு வெற்றியடையவில்லை.
இன்றைய தேவை கருதி அம்பேத்கரைத் திரித்துப் புரட்டும் இந்து மதவெறியர்கள் இன்று வரையிலும் அவரை வன்மத்துடன்தான் பார்க்கிறார்கள். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கோரும் அவரது மசோதாவை ஆத்திரம கொண்டு எதிர்த்தனர், கலவரம் செய்தனர். சில வருடங்களுக்கு முன் ‘இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்’ என்ற அவரது நூலைத் தடை செய்யக் கோரியும், மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டியதை எதிர்த்தும், ஆர்.எஸ்.எஸ். சிவசேனைக் கும்பல் வெறியாட்டம் நடத்தியது; பல தாழ்த்தப்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்; பல சேரிப்பகுதிகள் தீக்கிரையாகின; அம்பேத்கர் கைப்படச் சேகரித்த நூலகம் ஒன்றும் எரித்து அழிக்கப்பட்டது. அதன்பின் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்ததைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய தாழ்த்தப்பட்ட மக்களில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டு வங்கியைக் கவரவும், தனது ‘மேல்சாதி’த் தன்மையை மறைக்கவம் அம்பேத்கரைப் புகழ்பாடும் இந்து மத வெறியர்கள் அப்போதுகூட, ‘ஆம் எங்கள் மதத்தின் அழுக்குகளை அநாகரீகங்களைக் களைய முயன்றார் அம்பேத்கர்’ என்று கூறாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் சுத்தமாக வாழ்வதற்கு முயன்றார் என்று கூசாமல் கூறுகின்றனர். கன்சிராம், மாயாவதி, ராம்விலாஸ் பஸ்வான், திருமாவளவன், கிருஷ்ணசாமி இவர்களையெல்லாம் வென்றெடுத்துவிட்ட நிலையில் இந்து மத வெறியர்கள் இன்னும் ஒருபடி மேலேபோய் அம்பேத்கர் இந்துமத மகான்களில் ஒருவர் என்று கூடக் கூறமுடியும்.
அரசியல் சட்டத்தின் 25வது பிரிவில் முசுலீம், கிறித்தவர்கள் தவிர்த்த புத்த மதத்தினர், ஜைனர்கள், சீக்கியர்கள் ஆகியோர் இந்துக்கள் என்று கூறப்பட்டிருப்பது உண்மைதான். தான் எதிர்த்த காங்கிரசின் மந்திரி சபையில், அம்பேத்கர் சட்ட மந்திரியாக இருந்தது, அரசியல் சட்ட முன் வரைவுக் குழுத் தலைவராகப் பணியாற்றியது – இவையெல்லாம் அரசு என்ற நிறுவனத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் குறைந்தபட்ச உத்திரவாதமும், சலுகைகளும் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகத்தான். இவை சாதி ஒழிப்பின் சிக்கல்கள் நிறைந்த பாதை அம்பேத்கரிடம் ஏற்படுத்திய சமரசங்கள். அதேசமயம் இத்தகைய முயற்சிகளால் அவர் திருப்தியடையவில்லை; அவை தவறு என உணர்ந்தபோது தூக்கி எறியவும் செய்தார்.
”என் விருப்பத்திற்கெதிராக எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்யுமாறு பணிக்கப்பட்டேன், அரசியல் சட்டம் எழுத அவர்களுக்குக் கிடைத்த ஒரு சவாரிக் குதிரைதான் நான்” என்று கூறிய அம்பேத்கர் பின்னாளில் ”அரசியல் சட்டத்தை எழுதிய நானே அதை எரிப்பதிலும் முதல் நபராய் இருப்பேன்” என்றார். இந்துப் பெண்களுக்கான சமச் சொத்துரிமை தொடர்பான மசோதாவைத் திருத்தவும், தள்ளி வைக்கவும் முயன்ற நேரு அரசாங்கத்திற்கு எதிராக தன் சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார் அம்பேத்கர். இவை சமரசத்தின் மூலம் அம்பேத்கர் முடங்க மாட்டார் என்பதைக் காட்டுகின்றன.
சமீபத்தில் சீக்கிய மதம் இந்து மதத்தின் உட்பிரிவதான் என்ற கூறிய ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக சீக்கியர்கள் போராடினார்கள். அதனால் ஆர்.எஸ்.எஸ் தலைமை சீக்கிய மதம் தனியான மதம்தான் என்று மன்னிப்பு கேட்டு ஒப்புக் கொண்டது. ஆனால், தலித் பிழைப்புவாதிகள் பாரதீய ஜனதா கட்சியில் சங்கமமாயிருக்கும் இக்காலத்தில் பௌத்தத்தையும் அம்பேத்கரையும் இந்துமத வெறியர்கள் மற்றும் தலித் பிழைப்புவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கும் கடமை சாதிய ஒழிப்பில் அக்கறை கொண்ட ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
No comments:
Post a Comment